January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சஹ்ரானின் சகோதரருக்கு வெடி மருந்துகளை வழங்கிய நபர் தொடர்பில் விசாரணையில் வெளியான தகவல்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராசிக் ராஸா என்பவர் 2018 ஆம் ஆண்டில் சஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வான் மேற்கொண்ட வெடிகுண்டு பரிசோதனைக்காக வெடி மருந்துகளை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய குறித்த சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் பொறுப்பேற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மொஹமட் ரில்வான்  2018 இல் வெடிக்கும் சாதனமொன்றை சோதிக்க முயன்றபோது காயமடைந்தார். இந்த சம்பவம் ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் நடைபெற்றுள்ளது.

மேலும் வெடிபொருட்களை யார் சோதனைக்கு கொண்டு வந்தார்கள், சோதனை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பாக தெளிவாகத் தெரியவில்லை.

இந்த நிலையில், ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் கல்முனையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மொஹமட் ரில்வான் உயிரிழந்தார். குறித்த சம்பவம் தொடர்பாக பயங்கரவாத புலனாய்வு பிரிவு நீண்ட விசாரணைகளை நடத்தியது.

குறித்த விசாரணையில் ஈஸ்டர் தாக்குதலைத் திட்டமிட்டவர்கள் யார், வெடிக்கும் சோதனைக்கான மூலப்பொருள் வழங்கியவர்கள் யார் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக பயங்கரவாத புலனாய்வு பிரிவு தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், காந்தான்குடியில் வசிக்கும் 28 வயதான ராசிக் ராஸா, ரில்வானுடைய பரிசோதனைக்கு உதவியதாக நீண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி பயங்கரவாத விசாரணைப் பிரிவு, நீதிமன்றத்தில் நேற்று முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அவரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் அதனை எவ்வாறு திட்டமிட்டார்கள் என்பது பற்றி அவருக்கு நிறைய விடயங்கள் தெரியும் என்று சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.