கொரோனா வைரஸுக்கு எதிராக ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‘ஸ்புட்னிக்-வி’ கொரோனா தடுப்பூசி எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன.
இதன்படி, முதல் தொகுதியாக 15 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளதுடன், உடனடியாக மேல் மாகாணத்தில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த 15,000 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்ட பின்னரே ரஷ்யா, மேலதிகமாக 2 இலட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை அனுப்பும் என்று அறிவித்துள்ளது.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் ஒருவருக்கு ஒரு டோஸ் அளவில் தேவைப்படுகின்றதோடு, இது அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளைப் போன்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், கொரோனா வைரஸுக்கு எதிராக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் செயல்திறன் 91.6 சதவீதமாக இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.