November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அஸ்ட்ரா செனிகா பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸாக வேறு தடுப்பூசி; இலங்கை ஆராய்வு

அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியை ஏற்கனவே பயன்படுத்திய ஒருவருக்கு வேறு நிறுவனத்தின் தடுப்பூசியை இரண்டாவது டோஸாக வழங்குவது பாதுகாப்பானதா என்ற ஆராய்ச்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் 9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு இந்தியாவின் தயாரிப்பான ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டியுள்ளது.

நேற்று முதல் தொடக்கம் இரண்டாம் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு ஆரம்பித்தாலும், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்தியா ஏற்கனவே அனுப்பி வைத்த தடுப்பூசிகளில் 3 இலட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கின்ற நிலையில், மேலும் 6 இலட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்கள் மேலதிகமாக வழங்குவதாக தெரிவித்த தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலாவது டோஸிற்கு ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியையும் இரண்டாவது டோஸிற்கு இன்னொரு நிறுவனத்தின் தடுப்பூசியையும் பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமின்றி, அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியை ஏற்கனவே பயன்படுத்திய ஒருவருக்கு வேறு தடுப்பூசியினை இரண்டாவது டோஸாக வழங்குவது பாதுகாப்பானதா என்ற ஆராய்ச்சியிலும் இலங்கை ஈடுபட்டுள்ளது.

அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியை ஏற்கனவே பயன்படுத்தியவர்களுக்கு இரண்டாவது டோஸினை வழங்குவதற்கான தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை குறைவடைந்ததை தொடர்ந்தே, இலங்கை இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சி வெற்றியளித்தால் முதலில் அஸ்ட்ரா செனிகாவைப் பயன்படுத்தியவர்களுக்கு மற்றொரு நிறுவனத்தின் தடுப்பூசி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரஷ்யாவின் ஸ்புட்னிக் – வி தடுப்பூசிகளின் 15 ஆயிரம் டோஸ்கள் மே 4 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதுடன், உடனடியாக மேல் மாகாணத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.