January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்களை தண்டிக்க காலதாமதம் ஏற்படும் என்கிறார் பாதுகாப்பு செயலாளர்

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில், வலுவான ஆதாரங்களை கொண்டு அவர்களை தண்டிக்கும் நடவடிக்கைகளுக்காக காலதாமதம் ஏற்படும் எனவும், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய புதிய கைதுகள் இடம்பெற்றதாகவும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்த நாட்டில் அப்பாவி மக்களை மிலேச்சத்தனமான முறையில் கொன்று குவிக்க திட்டமிட்ட நபர்களையே நாம் கைது செய்துள்ளோம்.

ஒருவர் மீது குற்றம் சுமத்தி அவர்களை சிறையில் அடைத்தும் அவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாது போகுமானால் அதற்காக நாம் வெட்கப்பட வேண்டும்.அவ்வாறான தவறுகள் எதுவும் இடம்பெறக்கூடாது என்பதற்காக இவற்றை முறையாக செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது.

இந்த தாக்குதல் தொடர்பில் பல தரப்பட்ட நபர்களிடம் விசாரணைகளை நடத்தி வாக்குமூலம் பெறவேண்டியுள்ளது. அதற்கான வெவ்வேறு உக்தியை கையாளவும் சில இறுக்கமான தீர்மானம் எடுக்கவும் வேண்டியுள்ளது.எவ்வாறு இருப்பினும் சட்டமா அதிபரின் அறிவுரைக்கு அமைய இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.

ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட, தாக்குதலில் காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எம்மால் செய்து முடிக்க வேண்டிய கடமையை நாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம். எனினும் இது குறித்த நடவடிக்கைகளை ஒரு இரு நாட்களில் செய்து முடிக்க முடியாது.இந்த விசாரணைகளை முன்னெடுப்பதில் பல சவால்கள் உள்ளன, இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ள முறைமையும் அதனை நடத்தி முடித்துள்ள விதமும் மிகவும் சிக்கலுக்கு உரியதாகும்.

இவர்களுக்கு நிதி எவ்வாறு கிடைத்தது, யார் அனுப்பியது என்ற விடயங்கள் குறித்தும் ஆராய வேண்டியுள்ளது. அதனை நாம் ஆராய்ந்து வருகின்றோம். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்போம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.