
இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் அதிகரித்துவரும் கொரோனா பரவலை அடுத்து இத்தாலி பயணத் தடையை அறிவித்துள்ளது.
அத்துடன் இந்த நாடுகளிலிருந்து சமீபத்தில் நாட்டிற்குள் வந்தவர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிகளையும் கடுமையாக்கியுள்ளது.
இத்தாலியின் சுகாதார பிரிவு வெளியிட்டுள்ள புதிய விதிகளின் படி, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலிருந்து இத்தாலிக்கு வருவதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின் படி, இத்தாலியில் நிரந்தரமாக வாழும் இத்தாலிய குடியுரிமை உள்ளவர்களும் முன்னதாக இத்தாலியில் வசிக்கும் வெளிநாட்டினரும் மட்டுமே மூன்று நாடுகளில் இருந்து நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.
முன்னர் இவர்கள் உள்ளூர் சுகாதார அதிகாரிகளால் கண்காணிப்பில் பத்து நாட்கள் ஒரு “கொவிட் ஹோட்டலில்” தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தற்போது 15 நாட்கள் தனிமைப்படுத்தலை முன்னெடுக்க வேண்டும் என சுகாதார பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
மூன்று நாடுகளில் ஒன்றிலிருந்தும் இத்தாலிக்கு பயணிப்பவர்கள் எவரும் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பே கொரோனா தொற்று பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அத்தோடு இத்தாலி சென்றதும் இன்னொரு கொரோனா சோதனையை செய்து கொள்ள வேண்டும்.
பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதன் பின்பு மூன்றாவது சோதனை செய்து கொள்ள வேண்டும்.
கடந்த 14 நாட்களுக்குள் இந்த நாடுகளிலிருந்து இத்தாலிக்கு வந்தவர்கள், அல்லது இந்த நாடுகளின் ஊடாக பயணித்தவர்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.
இத்தாலி ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கும் 15 நாட்கள் கொரோனா கட்டுப்பாடுகள் விதிகளை அறிவித்துள்ளது.