July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சொகுசு ரயில் சேவைகள் உட்பட பல நெடுந்தூர ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

Train Common Image

சொகுசு ரயில் சேவைகள் உட்பட பல நெடுந்தூர ரயில் சேவைகளை இரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

கொவிட் -19 தொற்று காரணமாக முன்பதிவுகள் குறைவாக இருப்பதால், மே 01 முதல் பல சொகுசு ரயில் சேவைகளை இடைநிறுத்துவதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டை- பதுளை, கொழும்பு கோட்டை -கண்டி- கொழும்பு கோட்டை,கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை- கொழும்பு கோட்டை, கொழும்பு கோட்டை – பொலனறுவை ஆகிய கடுகதி ரயில் சேவைகள் மே 01 முதல்  சேவையில் ஈடுப்படமாட்டாது.

அத்துடன் பதுளை – கொழும்பு கோட்டை, கொழும்பு கோட்டை -பதுளை,பொலனறுவை- கொழும்பு கோட்டை, காங்கேசன்துறை – கொழும்பு கோட்டை,பதுளை – கொழும்பு கோட்டை ஆகிய  பிரதேசங்களுக்கான கடுகதி ரயில்கள் சனிக்கிழமை முதல் சேவையில் ஈடுபடமாட்டாது.

எனினும் கொழும்பு கோட்டையிலிருந்து ​​பதுளைக்கான எண் 1015 சொகுசு ரயில் மே மாதம் 08, 14 ஆம் திகதிகளில் காலை 8.30 மணிக்கு சேவையை முன்னெடுக்கும் எனவும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை எண் 1016 ரயில் மே மாதம் 09, 15 ஆகிய திகதிகளில் சேவையில் ஈடுபடும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ரயில் எண் 1001/1002 ஆகியவற்றுக்கு முன்பதிவு செய்த பயணிகள் மே மாதம் 01, 02, 08,13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை ரயில் எண் 1005 , 1006 ஆகியவற்றில் காலை 6.30 மணிக்கு பயணிக்க முடியும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, தற்போது சேவையில் உள்ள அலுவலக ரயில் நேர அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை எனவும் அவை வழமை போன்று சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பொது மக்கள் தேவையற்ற பயணங்களை முடிந்தளவிற்கு தவிர்த்துக் கொள்வதுடன், ரயில் நிலையத்திற்குள்ளும், ரயிலுக்குள்ளும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பொது பயணிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் எனுவும்  ரயில்வே திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.