November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் எம்.பி.க்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை

தங்களின் சொத்து பிரகடனங்களை பகிரங்கமாக வெளியிடுமாறு ‘ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா’ (TISL) நிறுவனம் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

2020/2021 ஆம் ஆண்டிற்கான தங்கள் சொத்து பிரகடனங்களை ஏகமனதாக பொது தளத்தில் வெளியிடுவதன் மூலம் நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்கு முன்வருமாறு ட்ரான்ஸ் பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்றத்தின் தங்கள் சொத்து பிரகடனங்களை ஏகமனதாக பொது தளத்தில் வெளியிட முன்வந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 12 உறுப்பினர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுமாறும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளுக்கும் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தகவல் அறியும் ஆணைக்குழுவின் அண்மைய கால முடிவின் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் 2021 ஜூன் 30ஆம் திகதிக்குள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கும் அதேவேளை, தங்களின் சொத்து அறிவித்தலை பகிரங்கமாக வெளியிடுவதன் மூலம் பொறுப்புக்கூறுவதற்கு முன்வர வேண்டும் என TISL நிறுவனம் அழைப்பு விடுக்கின்றது.

கடந்த காலங்களில், TISL நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாக இலங்கை அமைச்சரவை அலுவலகத்திலிருந்தும் இதே போன்ற தகவல்களை கோரியபோது, ஜனாதிபதி செயலகம் அப்போதைய பிரதமரின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பிரகடனத்தை TISL நிறுவனத்திற்கு வெளியிட்டதையும் நினைவு கூரியுள்ளது.

தகவல் அறியும் ஆணைக்குழுவின் இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க முடிவானது, வெளிப்படை ஜனநாயகத்திற்கான உறுதிப்பாட்டிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனவும் ‘ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா’ (TISL) நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.