November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘விடுதலைப் புலிகளின் நினைவுத் தூபிகளை அமைக்க இடமளிக்க மாட்டோம்’: பாதுகாப்பு செயலாளர்

வடக்கு- கிழக்கு பகுதிகளில் விடுதலைப்புலிகளை நினைவு கூரும் வகையில் நினைவுத் தூபிகளை அமைக்க முடியாது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், யாழ். மாநகரசபை மேயர் மூலமாக  இளைஞர்களுக்கு அணிவிக்கப்பட்ட ஆடை விடுதலைப் புலிகளின் ஆடை எனவும், இந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ‘மேயர் என்ற காரணத்திற்காகவோ அல்லது வேறு அதிகாரியாக இருக்கின்ற காரணத்தினாலேயோ இளைஞர்களை பயன்படுத்தி அவர்களுக்கு வேறு ஆடைகளை அணிவித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் செயற்பாடுகளை முன்னெடுப்பது சட்ட விரோதமானது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் குறித்த இளைஞர்களுக்கு விடுதலைப்புலிகளின் ஆடையே அணிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே யாழ். மேயரை உடனடியாக கைது செய்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, எதிர்காலத்திலும் எவரேனும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பின்னிற்க மாட்டோம் எனவும் இந்த நாட்டில் வடக்கிலோ தெற்கிலோ இளைஞர்கள் மீண்டும் ஒரு கஷ்ட  நிலைமையை சந்திக்கும் சூழல் உருவாக நாம் இடமளிக்க மாட்டோம் எனவும் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ‘யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு கூரும் தூபியே தவிர, விடுதலைப்புலிகளை நினைவு கூரும் தூபி அல்ல.

வடக்கிலோ, கிழக்கிலோ பயங்கரவாத அமைப்பை நினைவுகூரும் நினைவுத்தூபிகளை உருவாக்க நாம் இடமளிக்க மாட்டோம்’ எனவும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.