அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தில் இன்று முற்பகல் வேளை பதற்றமான சூழ்நிலை உருவாகியது.
நிறுவனத்தின் தலைவர், ரத்னசிறி கலூபஹான ஊழியர்களினால் அவரது அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டதையடுத்து இந்த பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
சரியான நேரத்தில் சம்பளம் வழங்கப்படாததன் காரணமாக தாம் விரக்தி அடைந்துள்ளதாக ஊழியர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
இந்த மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ள ஊழியர்கள், தகுதி இல்லாதவர்கள் நிறுவனத்தில் உயர் பதவிகளில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
எனினு சில அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாகவே தாம் இவ்வாறு ஊழியர்களினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ரத்னசிறி கலூபஹான தெரிவித்தார்.
குறித்த நிறுவனத்துடன் தொடர்புடைய அரசு நிறுவனங்கள் பணம் செலுத்தத் தாமதமானதையடுத்து சம்பளம் வழங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தலைமை அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே சம்பளத்தை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர் சம்பளத்தை உடனடியாக செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சம்பவ இடத்திற்கு பொலிஸாரும் சுகாதார பிரிவினரும் சென்றதையடுத்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சிறிது நேரத்தில் ஊழியர்கள் கலைக்கப்பட்டதால் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மீறப்படவில்லை என சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.