கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும் பொலிஸ் பிரிவுகள், கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், எவ்வித முன்னறிவித்தலுமின்றி முடக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே இந்நிலைக்கு முகம்கொடுக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் என அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு முன்னர் முன்னறிவித்தல் வழங்கப்பட்டு பிரதேசங்கள் முடக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போதைய தொற்று அதிகரிப்பின் காரணமாக எவ்வித அறிவிப்பும் இன்றி முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், நாட்டை முழுமையாக முடக்க எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் இன்று ஒரு முக்கியமான சூழ்நிலையை அடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இது தொடர்பில் பொதுமக்களுக்கு பலமுறை அறிவுறுத்திய போதும், சரியான சுகாதார ஆலோசனையைப் பின்பற்றாததால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போதை விட அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த இரண்டு தினங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.