July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சாரா’ உயிரிழந்து விட்டதாகவே நாங்கள் கருதுகின்றோம்; சரத் வீரசேகர

உயிர்த்த ஞாயிறு தொடர் தாக்குதலில் கட்டுவாப்பிட்டி தற்கொலை குண்டுதாரியின் மனைவி என கருதப்படும் சாரா எனப்படும் புலத்சினி ராஜேந்திரன் உயிரிழந்துவிட்டதாக தாங்கள் கருதுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இரண்டு வருடங்களாகியுள்ள போதிலும் சாராவிற்கு என்ன நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாங்கள் திட்டமிட்டுள்ள இரண்டாவது மரபணு பரிசோதனை மிகவும் கடினமானது என தெரிவித்துள்ள அமைச்சர், சாரா இறந்துவிட்டாரா அல்லது இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளாரா என்பதை உறுதி செய்வதற்காக புதைக்கப்பட்டுள்ள பெருமளவு உடல்பாகங்களை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

“நிசார்” என்ற சாட்சியொருவர் வழங்கிய வாக்கு மூலத்தின் படி “சாரா புலத்சினி” என்ற தமிழ் பெண் இஸ்லாமிய மதத்திற்கு மாறி கட்டுவாப்பிட்டிய தற்கொலை குண்டுதாரி ஹஸ்துன் என்பவரை திருமணம் செய்ததாகவும் அவர் இந்தியாவிற்கு தப்பி சென்றுவிட்டதாக தெரிய வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

“சாய்ந்தமருது குண்டு வெடிப்பின் போது ஒருசில நொடிகளில் அவர் தப்பியிருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார் என்றே நாங்கள் கருதுகின்றோம்” என அமைச்சர் தெரிவித்தார்.

அத்தோடு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் “சாரா” தப்பி செல்வதற்கு உதவியதை தான் பார்த்ததாகவும் “நிசார்” தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதனை நிரூபிக்க சிசிடிவி கமரா காட்சிகளோ அல்லது வேறு எந்த ஆதாரமோ கிடைக்காத நிலையில் அவர் பொய் கூறியிருக்கலாம் என கருதுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“இந்திய புலனாய்வு துறையை அணுகியுள்ளோம். அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.வேறு எந்த ஆதாரங்களுமில்லாததன் காரணமாக நாங்கள் இந்த விவகாரத்தை முடிவிற்கு கொண்டுவரமுடியாத நிலையில் உள்ளோம்” எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.