
கொவிட் நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட “தீவிர சிகிச்சை பிரிவின் படுக்கைகள்” நிரம்பி விட்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இதுவரை பயன்படுத்தப்படாத மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகளை கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
நாட்டில் உள்ள வைத்தியசாலைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள படுக்கைகளில் ஒரு பகுதியை மட்டுமே இதுவரை கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கியுள்ளதாக தெரிவித்த அவர், அனைத்து படுக்கைகளையும் கொவிட் நோயாளிகளுக்கு ஒதுக்குவதன் மூலம் நெருக்கடியான நிலைமையை சமாளிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் இன்று(புதன்கிழமை) 1,451 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிகப்படியான கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை இதுவாகும்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 104938 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை 95,083 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர்.
அத்தோடு நாட்டில் இன்று(புதன்கிழமை) மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 661 ஆக அதிகரித்துள்ளது