
இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெங் ஃபெங், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பு அலரிமாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்த சந்திப்பின் ஊடாக எமது பலமான மற்றும் நட்பு ரீதியிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன் என்று இதன்போது பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, சீன பாதுகாப்பு அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சீனா வழங்கும் பங்களிப்புக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளதுடன், இந்த தொற்றுநோயைக் கையாள்வதில் சீன அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உலகளாவிய ரீதியில் இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும், அவ்வாறான முதலீட்டாளர்களின் இலங்கை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு சீனாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.