February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”மோசமான ஜனநாயக அடக்குமுறைக்குள் நாடு தள்ளப்பட்டுள்ளது”: வெளிநாட்டு தூதுவர்களிடம் சஜித் தெரிவிப்பு

இலங்கை மக்களின் மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு மிக மோசமான அடக்குமுறை ஆட்சியொன்றை கையாள அரசாங்கம் முயற்சிப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு சவாலான பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறிக்கும் அளவிற்கு அரச அடக்குமுறை கையாளப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொவிட் -19 வைரஸ் நிலைமையை கையாள்வதில் அரசாங்கம் பலவீனப்பட்டுள்ளதாகவும், இலங்கையில் சகல மக்களுக்கும் தடுப்பூசியை ஏற்றும் செயற்பாட்டை முன்னெடுக்க சர்வதேச நாடுகளின் பூரண ஒத்துழைப்பு அவசியமாகும் எனவும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சைபி, பிரான்ஸின் தூதுவர் எரிக் லாவெர்ட், இத்தாலியின் தூதுவர் ரீட்டா கியுலியானா மன்னெல்லா, ஜெர்மனியின் தூதுவர் ஹோல்கர் சியூபர்ட், ருமேனியாவின் தூதுவர் விக்டர் சியுஜ்தியா ஆகியோரை சஜித் பிரேமதாஸ சந்தித்து கலந்துரையாடினார்.

அதனை தொடர்ந்து அமெரிக்க தூதுவர் எலினா பி. டெப்லிட்ஸ், அவுஸ்திரேலிய துணை தூதுவர் அமண்டா ஜுவல், சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்லர், நோர்வே தூதுவர் ட்ரைன் ஜோர்ன்லி மற்றும் கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் ஆகியோரையும் எதிர்க்கட்சி தலைவர் சந்தித்திருந்தார்.

இந்த சந்திப்புகளின் போது, கொவிட் தொற்று நிலைமை தொடர்பாகவும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர், தூதுவர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

தற்போது உலகளாவிய ரீதியில் சகலரும் எதிர்கொள்ளும் கொவிட் -19 வைரஸ் நிலைமை இலங்கைக்கு சமாளிக்க முடியாத வகையில் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சர்வதேச தூதுவர்களிடம் கூறியுள்ளார்.

இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் நிலைமைகளை கையாள்வதில் பலவீனம் கண்டுள்ளதாக கூறியுள்ளார். எவ்வாறு இருப்பினும் நாட்டில் சகல மக்களுக்கும் தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதற்கு சர்வதேச நாடுகளில் முழுமையான ஒத்துழைப்பை தாம் எதிர்பார்ப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும்  மக்களின் மனித உரிமைகள், சிவில் உரிமைகள், பொருளாதார உரிமைகள், சமூக உரிமைகள், அரசியல் உரிமைகள், சமய உரிமைகள் மற்றும் கலாசார உரிமைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், சர்வதேச அழுத்தங்களில் தொடர்ச்சியாக இலங்கை நெருக்கப்பட இதுவே காரணமாக அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் எல்லை தாண்டிய அடக்குமுறை நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்கு உற்படுத்தியுள்ளதாகவும், குறிப்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான அடக்குமுறையை அரசாங்கம் கையாளும் விதம் மிக மோசமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக அரசாங்கத்திற்கு சவாலான எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறிக்கும் செயற்பாடுகளை கூட அரசாங்கம் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளதாகவும், பாராளுமன்றத்தில் சிறப்புரிமையை பயன்படுத்தி பேசும் உறுப்பினர்களின் மீது கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் வெளிநாட்டு தூதுவர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கை குறித்தும், ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளை இலக்கு வைத்த நாட்டின் உற்பத்தி வேலைத்திட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்தும் தூதுவர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், தற்போது நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மற்றும் அதற்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம், அதற்கான சர்வதேச உதவிகள், நிதி ஒதுக்கீடுகள் என்பன குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் அந்த சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.