பேராதெனிய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழு புதிய கொவிட் – 19 சோதனைக் கருவி மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளது.
‘ரெஸ்பிரோன் நானோ 99’ எனப்படும் முகக்கவசத்தை அறிமுகப்படுத்தி வைக்கும் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
இந்த புதிய முகக்கவசம் மேம்பட்ட நானோ-வடிகட்டுதலுடன் கூடியது எனவும் தடையின்றி சுவாசிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் உபாலி திசாநாயக்க தெரிவித்தார்.
அத்தோடு இந்த முகக்கவசம், வைரஸ் மற்றும் பாக்டீரியாவை கொல்லும் எனவும் இது 25 முறை கழுவிக் கழுவி மீண்டும் பயன்படுத்தக் கூடியது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முகக்கவசம் அணிந்திருக்கும் நபரினால் வெளியிடப்படும் கார்பனீர் ஒக்சைடை வெளியேற்றும் தன்மை கொண்டது எனவும் பேராசிரியர் திசாநாயக்க கூறினார்.
நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் அவசியமான இந்த இரண்டு தயாரிப்புகளையும் சதொச மற்றும் நாடளாவிய வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்ய வேண்டும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புதிய முகக்கவசம் ரூ .200 க்கு விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தரச் சான்றிதழ் பெறப்பட்டு ‘ரெஸ்பிரோன் நானோ 99’ முகக்கவசங்களை உலக சந்தையில் விற்பனை செய்வதற்கான திட்டங்கள் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, பேராதெனிய பல்கலைக்கழகத்தின் மற்றொரு கண்டுபிடிப்பான புதிய கொவிட் சோதனை கருவி கொரோனா வைரஸின் மாறுபாடுகளை அடையாளம் காணும் திறன் கொண்டது என பேராசிரியர் ருச்சிகா பெர்னாண்டோ தெரிவித்தார்.
“புதிய கொவிட் சோதனை கருவியின் ஊடாக சோதனைகளின் முடிவுகளை இரண்டு மணி நேரத்திற்குள் பெற முடியும்” என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனை 1500 ரூபாய்க்கும் குறைவாக விற்பனை செய்ய முடியும் எனவும் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ருச்சிகா பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
“இந்த புதிய பி.சி.ஆர் சோதனைக் கருவி பயன்பாட்டுக்கு வந்ததும் நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய தொகையை சேமிக்க முடியும் என சுட்டிக்காட்டிய அவர், இது தேசத்திற்கு ஒரு பெரிய சேமிப்பாக இருக்கும் என்றார்.
தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஒப்புதல் அளித்தவுடன், புதிய சோதனை கருவி விற்பனைக்கு விடப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.