
தேசிய இறைவரித் திணைக்களத்தின் கட்டமைப்பின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் மூலமாக 105 மில்லியன் ரூபா அறவிடப்படாதுள்ளதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழு தெரிவித்துள்ளது.
அதேநேரம், வரி செலுத்துனர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய வரிகள் மற்றும் தண்டப்பணங்கள் குறித்து இரண்டு முதல் ஐந்து மாதங்களில் அறிக்கையிடுமாறு அரசாங்க கணக்குகள் பற்றிய குழு, தேசிய இறைவரித் திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
தேசிய இறைவரித் திணைக்களத்தின் கட்டமைப்பின் கீழ் எவ்வித சிக்கலும் இன்றி வசூலிக்கக் கூடிய வரி நிலுவைத் தொகை மற்றும் வரி நிலுவையை வசூலிப்பதில் பிரச்சினைக்குரியதாக காணப்படும் நிறுவனங்கள் தொடர்பில் இரண்டு மாதங்களுக்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் பதில் தலைவராக கடமையாற்றிய கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், (Legacy) கட்டமைப்பின் கீழ் எவ்வித சிக்கலும் இன்றி வசூலிக்கக் கூடிய வரி நிலுவைத் தொகை மற்றும் வரி நிலுவையை வசூலிப்பதில் பிரச்சினைக்குரியதாகக் காணப்படும் நிறுவனங்கள் தொடர்பில் ஐந்து மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் இறைவரித் திணைக்களத்துக்கு வலியுறுத்தினார்.
இந்நிலையில் கட்டமைப்புக்கு அமைய கடந்த மாதம் 31 ஆம் திகதி வரை அடையாளம் காணப்பட்ட நிறுவனங்களிடமிருந்து வரி நிலுவையாக 18 பில்லியன் ரூபா அடையாளம் காணப்பட்டுள்ளது.
அத்தோடு RAMIS கட்டமைப்புக்கு அமைய (Legacy) 31 ஆம் திகதி வரை அடையாளம் காணப்பட்ட நிறுவனங்களிடமிருந்து வரி நிலுவையாக 87 பில்லியன் ரூபா அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலுவை வரியை வசூலிப்பதற்காக நீதிமன்றத்தில் காணப்படும் வழக்குகளை விரைவில் விசாரித்து அவற்றை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பில் நீதி அமைச்சுடன் இணைந்த செயற்றிட்டமொன்றை முன்னெடுப்பது குறித்த யோசனை அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் கடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.