கொள்ளுப்பிட்டி பொதுச் சந்தை அமைந்துள்ள காணியை அபிவிருத்தி திட்டங்களுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பொதுச் சந்தை வளாகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான உத்தேச திட்டம் கடந்த மாதம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன் போது, கொள்ளுப்பிட்டி சந்தை தொகுதி அமைந்துள்ள இடத்தில் 39 மாடியிலான நவீன சந்தையுடன் கூடிய குடியிருப்பு தொகுதியை அமைப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் பிரிவு 15 (1) இன் கீழ் பிரதமருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும் இருக்கும் பிரதமரினால், கொள்ளுப்பிட்ட சந்தை வளாகம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக தற்போதைய கொள்ளுப்பிட்டி சந்தை தொகுதி இடிக்கப்பட உள்ளது.இந்த புதிய கட்டிட தொகுதியில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனையாளர்களுக்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியிருந்தார்.
அத்தோடு சாதாரண வர்த்தகர்கள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு புதிய சந்தை வளாகத்தில் நிச்சயமாக இடம் ஒதுக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியிருந்தார்.
39 மாடியில் உருவாகும் புதிய கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்கள் வர்த்தக நிலையங்களைக் கொண்டிருக்கும்.
எட்டாவது மாடியிலிருந்து மேல்நோக்கி இரண்டு கோபுரங்களில் கட்டப்படும் 30 மாடிகள் சொகுசு குடியிருப்பு கட்டிடங்களைக் கொண்டதாக அமையும்.
இப்புதிய சந்தை வளாகம் சுற்றுலாத் தலமாகவும், உள்ளூர் உணவு கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் வடிவமைக்கப்படவுள்ளது.
தற்போது கொள்ளுப்பிட்டி பொதுச் சந்தை வளாகத்தில் 30-40 வாகனங்கள் மாத்திரமே நிறுத்தக்கூடியதாக உள்ள போதிலும், புதிய கட்டிடத்தில் 348 வாகனங்களை நிறுத்தக்கூடிய வசதிகள் உருவாக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று ஆண்டுகளில் இந்த திட்டத்தை நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
நகர அபிவிருத்தி அதிகாரசபை, கொழும்பு மாநகரசபை, மற்றும் முதலீட்டு நிறுவனம் ஆகியன இணைந்ததாக இப்புதிய திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.