தற்போதைய நிலையில் யாழ்.மாவட்டத்தை முடக்கும் தீர்மானம் இல்லை எனவும் பொது மக்கள் வீணாக பீதியடைய வேண்டாம் எனவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தின் கொரோனா நிலைமைகள் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், தொடர்ச்சியான பி.சீ.ஆர் பரிசோதனைகளின் படி நேற்று (திங்கட்கிழமை) 13 பேருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன், யாழ். மாவட்டத்தில் ஒக்டோபர் மாதத்திற்கு பிறகு 1201 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு இன்று (செவ்வாய்க்கிழமை)வரை 19 கொரோனா மரணங்கள் யாழ். மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், நேற்று (திங்கட்கிழமை) வரை ஆயிரத்து 253 குடும்பங்களைச் சேர்ந்த 3416 நபர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது அரசினுடைய புதிய சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள், அரச, தனியார் துறை நிறுவனங்கள் அனைவரும் புதிய நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தினை முடக்குவதற்கான தீர்மானம் இல்லை. ஆனால் அரசாங்கம் ஏனைய மாவட்டங்களில் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி இருக்கின்றது.
இந்த நிலைமை யாழ்.மாவட்டத்திற்கு ஏற்படும் போது நிச்சயமாக முடக்குவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.