July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையர்களுக்கு 2 வது டோஸாக மாற்று தடுப்பூசி; பக்க விளைவுகள் இல்லை என்கிறார் வைத்தியர் பிரசன்ன குணரத்ன

இலங்கையில் முதலாம் தடுப்பூசியாக அஸ்ட்ரா செனகாவை ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசியாக மாற்று தடுப்பூசி ஏதேனுமொன்றை ஏற்றவேண்டியுள்ளதாக தேசிய ஒளடத அதிகார சபையின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணரத்ன தெரிவித்தார்.

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது இந்தியாவின் தடுப்பூசிகளை எம்மால் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை காரணமாக ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்காவின் தடுப்பூசிகளை பயன்படுத்த தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரையில் எமக்கு தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் முதலாம் கட்டத்தில் இரண்டு இலட்சமும், பின்னர் நான்கு இலட்சம், அடுத்து எட்டு இலட்சம் அதை தொடர்ந்து 1.2 மில்லியன் என படிப்படியாக கிடைக்கும் என்றார்.

அதேபோல் மே மாதத்தில் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசிகளும் ஏழு மில்லியன் அளவில் நாட்டுக்கு கிடைக்க பெறவுள்ளதாகவும் வைத்தியர் பிரசன்ன குணரத்ன குறிப்பிட்டார்.

இரண்டு வேறுபட்ட தடுப்பூசிகளை ஏற்றுவதால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படப்போவதில்லை. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இது குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் மாறுபட்ட தடுப்பூசிகளை பயன்படுத்தி முன்னேற்றகரமான விளைவுகளை உறுதிப்படுத்தியுள்ளனர் எனவும் வைத்தியர் பிரசன்ன குணரத்ன கூறினார்.