‘சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல் இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவினுடைய 44 ஆவது நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, அனைத்து மக்களுக்கும் இன, மத பேதமின்றி சகல விதமான சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே தந்தை செல்வா 1949 ஆம் ஆண்டு கட்சியை ஆரம்பித்தார்.
நாங்களும் அவரது கொள்கைகளுக்கமையவே கடந்த 70 வருடங்களாக பயணித்து வருகின்றோம். அதிகளவான கட்சிகள் அவரது நிலைப்பாட்டினை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
‘அந்தவகையில் நாமும் அவைகளை அடையக்கூடிய நிலையிலேயே தற்போது இருக்கின்றோம். சில பிரச்சனைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்துள்ளோம்’ எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
‘இதேவேளை, நாட்டில் பாரிய ஆட்சி மாற்றமொன்று ஏற்பட வேண்டும். எதிர்வரும் காலங்களிலும் எங்களது இலக்கில் இருந்து விலகாமல், சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல் இலக்கை நோக்கிப் பயணிப்பதன் ஊடாக மாத்திரமே நாம் வெற்றியடைய முடியும்’ எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.