இலங்கையில் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி நாளை முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையில் குறித்த மாகாணங்களில் அனைத்து பாடசாலைகளும் மற்றும் முன்பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் நிலவும் கொவிட் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் மற்றைய மாகாணங்களில் தனிமைப்படுத்தப்படாத பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் வழமைப் போன்று சுகாதார ஒழுங்கு விதிகளுடன் நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஆயர் இல்லம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சியம்பலாண்டுவ, மொனராகலை, புத்தல ஆகிய கல்வி வலயங்களில் உள்ள 15 பாடசாலைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை கல்விவலயத்திலுள்ள 5 பாடசாலைகளும் புத்தல கல்வி வலயத்திலுள்ள 4 பாடசாலைகளும் சியம்பலாண்டுவ கல்வி வலயத்திலுள்ள 6 பாடசாலைகளும் இவ்வாறு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளது.