யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில் மக்களை விழிப்பாக இருக்குமாறு அரசாங்க அதிபர் க. மகேசன் அவசர அறிவிப்பு விடுத்துள்ளார்.
கம்பஹா- மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், நாடு முழுவதும் சுகாதார அமைச்சு கொரோனா தடுப்பு முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் யாழ். மாவட்ட மக்கள் அவதானமாக செயற்பட்டு தங்களை தாங்களாகவே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்த்து வீடுகளில் இருக்க வேண்டும் என்றும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொது இடங்களிலும் வியாபார நிலையங்களிலும் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் வழமைபோல் இயங்கும் அரச அலுவலகங்களில் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
புங்குடுதீவில் அதிகாரிகள் நடவடிக்கை
இதனிடையே மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிந்துவிட்டு வீடு திரும்பியுள்ள யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உட்பட 20 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
வேலணை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்களில் ஒருவர் கடந்த 30ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார். அவர் கடந்த 4 நாட்களில் பழகியவர்கள் தொடர்பில் தகவல் திரட்டப்பட்டு அவர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மற்றைய பெண் இன்று ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளார். அவரது குடும்பமும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அவர்களிடம் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
பரிசோதனை முடிவு கிடைத்தவுடன் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
இதனிடையே, ஊர் திரும்பிய குறித்த பெண்களின் வீட்டுச் சூழலில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
குறித்த பகுதியில் மக்களை சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.