ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பிலான கண்காணிப்புக் குழுவிற்கு இலங்கை பிரதிநிதி ஒருவரை நியமிக்க இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதேநேரம் இலங்கையின் உள்ளக விடயங்களில் சர்வதேச கண்காணிப்புகளை தாம் அனுமதிக்க விரும்பவில்லை எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், நடைபெற்று முடிந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடரில் இலங்கை அரசு மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் நாட்டில் இடம்பெற்ற, இடம்பெற்று கொண்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த கட்டமாக இலங்கையின் செயற்பாடுகளை கண்காணிக்க மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்புக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
அத்துடன், இலங்கையின் உள்ளக செயற்பாடுகளை கண்காணிக்கும் எந்த காரணிகளுக்கும் இலங்கை அரசாங்கம் இடமளிக்க முடியாது என்றும் , ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்படவுள்ள கண்காணிப்பு குழுவில் இலங்கை பிரதிநிதி ஒருவரை நியமிக்க மாட்டோம் என்றும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.