January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை விமான நிலையங்கள் இப்போதைக்கு திறக்கப்படாது

இலங்கையில் உள்ள விமான நிலையங்களின் ‘உட்செல்லும் – வெளிச்செல்லும் பகுதிகளை’ நாளை முதல் மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விமான நிலையங்களில் உள்ள சுங்கத் தீர்வை- விலக்கு பகுதிகளுக்குள் (Duty-free zone) வெளிநபர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் இரண்டு பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையிலேயே கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில் வசிக்கும் விமான நிலைய ஊழியர்களை மறு அறிவித்தல் வரும் வரை பணிக்கு வரவேண்டாம் என்றும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

 இது குறித்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ‘தமிழ் அவனிக்கு’ கருத்து தெரிவிக்கையில், “விமான நிலையங்களை இந்த மாத இறுதிக்குள் திறக்க முடியும் என்ற நிலைப்பாடு இருந்தாலும் கூட தற்போது நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்போதைக்கு திறக்கும் வாய்ப்புகள் இல்லை’ என்று கூறினார்.

மேலும், டிசம்பர் மாதம் நிலவும் குளிர்-காலநிலையுடன் வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதி வரையில் விமான நிலையங்கள் திறக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.