“திலீபனின் அகிம்சைவழி போராட்டம் என்பது ஒரு சமூகத்தின் விடுதலைக்கான போராட்டம், அந்தப் போராட்டத்தை நாம் இழிவுபடுத்த முடியாது” என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கூறியுள்ளார்.
“இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் ஏனைய சமூகங்களுக்கு இணையாக, நிம்மதியாக வாழ வேண்டும் என்ற திலீபனின் கனவை அடைவதற்காகவே” தாம் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதாகவும் தபால் சேவைகள் மற்றும் ஊடக தொழில்சார் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சரிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பின.
அண்மையில், யாழ்ப்பாணம் சென்றிருந்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, திலீபன் நினைவேந்தல் மீதான தடையை நியாயப்படுத்திப் பேசியிருந்தார்.
அன்று அருகிலிருந்த அமைச்சர் வியாழேந்திரன் அதுபற்றி எதுவும் பேசவில்லையே என்று மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஒருவர் இன்று கேள்வி எழுப்பினார்.
“அந்தக் கருத்து அமைச்சர் கெஹெலியவின் கருத்து, என்னிடம் கேட்கப்பட்டிருந்தால் எனது நிலைப்பாட்டைக் கூறியிருப்பேன்” என்று வியாழேந்திரன் பதிலளித்தார்.
“எங்களுடைய குறுகிய அரசியல் நோக்கத்துக்காக அரசியலை செய்ய முடியாது. நாங்கள் வடக்கு-கிழக்கில் இடம்பெற்ற கடையடைப்பு- ஹர்த்தாலை குழப்பவில்லை. அதற்கு எதிர்மாறாக செயற்படவுமில்லை” என்றும் அமைச்சர் கூறினார்.