January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசாங்கத்தில் இருந்து வெளியேற நினைப்பவர்களுக்கு கதவுகள் திறந்துள்ளன’;பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ

அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை அரசாங்கத்திற்குள் இருந்து விமர்சிக்கும் நபர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆளும் கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

“அரசாங்கத்தில் இருந்து வெளியேற நினைப்பவர்களுக்காக கதவுகள் திறந்துள்ளதாகவும்” பிரதமர்  குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கமாக எடுக்கும் தீர்மானங்கள் சகலரையும் சார்ந்ததாகும் எனவும், அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அரசாங்கத்தை விமர்சிக்கும் ஜனநாயக உரிமை சகலருக்கும் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

எனினும் ஆட்சியாளர்கள் அல்லது ஆளும் கட்சிக்குள் உள்ள அமைச்சர்கள், உறுப்பினர்கள் அரசாங்கத்தை மோசமாக விமர்சித்து நெருக்கடிகளை ஏற்படுத்துவதானது, ஆட்சியை கொண்டு செல்ல கடினமானதாக அமையும் எனவும் கூறியுள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து வெளியேற நினைப்பவர்களுக்காக கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் எனவும் அவர்கள் வெளியில் சென்று தமது விமர்சனக் கருத்துக்களை முன்வைக்க முடியும் எனவும் பிரதமர் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார்.