
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் வடக்கு மாகாண மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் அதிகளவில் காணப்படுகின்றது. எனவே இந்திய மீனவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஊடாக வடக்கில் கொரோனா பரவக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகளவில் காணப்படுகின்றதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் கூறினார்.
அதேபோல் வடக்கு மாகாணத்திற்கு ஏனைய மாகாணங்களில் இருந்து வருபவர்களிடம் கொரோனா தொற்றக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.
எனவே, இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண மக்கள் மிகவும் அவதானமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிதல், பொது இடங்களில் ஒன்று கூடுவதைத் தவிர்த்தல், அநாவசியமாக வீதிகளில் பயணிப்பதைத் தவிர்த்தல் போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு வடக்கு மாகாண மக்கள் செயற்பட வேண்டும்”.- என சஞ்சீவ தர்மரட்ன மேலும் தெரிவித்தார்.