இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சுகாதார அமைச்சின் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய இந்து ஆலயங்களில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்களை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
ஆலயத்தில் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் மறு அறிவித்தல் வரை ஆலயங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆலயங்களில் வழமையான பூஜை, தனிநபர் வழிபாடுகள் தவிர்ந்த எந்தவித கூட்டு பிரார்த்தனைகளையோ நிகழ்வுகளையோ, ஒன்றுகூடல்களையோ அனுமதிக்கக் கூடாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, ஆலயங்கள் மற்றும் அதன் வளாகங்களில் சமூக இடைவெளியை பேணி, வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை 50ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
எனினும் சமூக இடைவெளியை பேணி, 50 பேரை வழிபாட்டுக்கு அனுமதிப்பதற்கான இடவசதி இல்லாத ஆலயங்களில் பிரதேச பொது சுகாதார பரிசோதகரினால் அனுமதிக்கப்படும் எண்ணிக்கைக்கு ஏற்ப வழிபாடுகளை முன்னெடுக்க முடியும் எனவும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழிகாட்டல்கள் மே மாதம் 31 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.