இலங்கையில் முதலாவது கொரோனா அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திதை போன்று, தற்போதைய அலையையும் கட்டுப்படுத்த வேண்டுமாயின் சுகாதார ஒழுங்குவிதிகள் மற்றும் ஆலோசனைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டியது அவசிமாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டை முடக்கி தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முடியுமென்று சிலர் கூறுகின்ற போதும், இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் அவ்வாறு செய்வது மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை பெருமளவில் பாதிக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இருக்கும் ஒரே வழி தடுப்பூசிகளை செலுத்துவது மாத்திரமே எனவும், இதன்படி மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும் துரித வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையொன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய உலக சுகாதார தாபனம் தற்போது அங்கீகரித்துள்ள மற்றும் எதிர்காலத்தில் அங்கீகாரம் வழங்க உள்ள கொவிட் ஒழிப்பு தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
முதலில் கொண்டுவரப்பட்ட அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசி 925,242 பேருக்கு இதுவரையில் வழங்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசியின் இரண்டாவது கட்டம் மே மாதம் முதலாம் வாரத்தில் வழங்கப்படவுள்ளது.
முன்னணி சுகாதார அதிகாரிகள், கொவிட் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 356,000 பேருக்கு இரண்டாவது கட்டம் வழங்கப்படும்.
இதேவேளை ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசி 200,000 ஏப்ரல் மாத இறுதியிலும் 400,000 தடுப்பூசிகள் மே மாதத்திலும், 800,000 தடுப்பூசிகள் ஜூன் மாதத்திலும் 1,200,000 தடுப்பூசிகள் ஜூலை மாதத்திலும் கொண்டு வரப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் அன்பளிப்பாக சீனாவிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள 600,000 செனோபாம் தடுப்பூசிகள் எதிர்வரும் சில வாரங்களில் உலக சுகாதார தாபனத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றதும் நாட்டு மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.