November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நாமல் ராஜபக்‌ஷ நியமனம்

இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ  நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற சங்கத்தின் கூட்டத்திலேயே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் சங்கத்தின் உபதலைவர்களாக கலாநிதி உபுல் கலப்பதி, அரவிந்த குமார் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் உதவிச் செயலாளராக மொஹமட் முஸம்மிலும், பொருளாளராக இஷாக் ரஹ்மான் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இங்கு கருத்துத் தெரிவித்துள்ள சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, கி.மு 206ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் காணப்படுவதாகவும், 1957 ஆம் ஆண்டு முதல் உத்தியோகபூர்வமாக இரு நாட்டுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் உறவுகள் மேலும் பலப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய சீனத் தூதுவர், இலங்கை – சீன நட்புறவு சங்கத்தை மீண்டும் ஸ்தாபித்தமைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதனூடாக இது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், இலங்கைக்கு மேலும் ஆதரவை வழங்க சீனா தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.