இலங்கையில் பாடசாலைகளை மூடுவதற்கு இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்து பாடசாலைகளையும் சுகாதார ஒழுங்குவிதிகளுடன் தொடர்ந்தும் நடத்திச் செல்வதற்கே எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென்று பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடி வருவதாகவும், ஆனபோதும் பாடசாலைகளை மூடுவதற்கு இதுவரையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் அதிபர்களின் தலைமையில் குழுக்களினால் பாடசாலைகளை நடத்திச் செல்வது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் தொடர்பான அறிவித்தலில் சகல தனியார் மற்றும் மேலதிக வகுப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளில் 50 வீதமான மாணவர்களுடன் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.