யாழ்ப்பாணத்தில் இன்று மாலையிலிருந்து சுகாதார ஒழுங்குவிதிகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதற்காக பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உதவியை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அநாவசியமாக வீதிகளில் நடமாடாது பாதுகாப்பாக தங்களின் வீடுகளில் இருக்குமாறு அவரால் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று முற்பகல் யாழ். மத்திய பஸ் நிலையத்திற்கு சென்ற யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் அங்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தென்னிந்திய மீனவர்கள் ஊடாக கொரோனா தொற்று பரவும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், இதனால் கரையோரப் பகுதி மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.