இலங்கைக்குள் போதைப் பொருள் வியாபாரத்தை முன்னெடுக்கும் சர்வதேச வலையமைப்பை கட்டுப்படுத்தும் விதமாக 18 சிவப்பு அறிவித்தல்களை விடுத்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
இலங்கையுடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் (இண்டர்போல்) உதவியை நாடவுள்ளதாகக் கூறிய பாதுகாப்புச் செயலாளர், இலங்கையில் முக்கிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் பிரதான நபர்களை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
“சர்வதேச ரீதியில் செயற்படும் ஒருசில நபர்களை பூசா சிறையில் வெளியுலக தொடர்புகள் இன்றி தனிமைப்படுத்தி வைத்துள்ளோம். பாகிஸ்தானைச் சேர்ந்த கைதிகள் சிலர் இவ்வாறு சிறைகளில் உள்ளனர். இவர்கள் மூலமாகவே சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு இயங்கியுள்ளது” என்றார் கமல் குணரத்ன.
“அண்மைக் காலங்களில் பிடிபட்ட முக்கிய குற்றவாளிகள் சர்வதேச ரீதியில் இயங்கியவர்கள், அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்ததைப் போலவே சர்வதேச மட்டத்தில் செயற்படும் பலரையும் கைதுசெய்ய சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன.