
இலங்கையின் வட-மேற்கே புத்தளம் மாவட்டம், ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு மூன்றாவது தடவையாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக நாட்டின் சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
“ஆனமடுவ, தென்னன்கூரியா பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞருக்கே” இவ்வாறு மூன்றாவது தடவையாக குறித்த தொற்று ஏற்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வந்த குறித்த இளைஞர் வெலிக்கந்தை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது அவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை முதலில் தெரியவந்தது.
வெலிக்கந்தை வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய அவர் தன்னை வீட்டில் சுய-தனிமைக்கு உட்படுத்திக்கொண்டார்.
அதன்பின்னர் குறித்த இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பிசிஆர் பரிசோதனையின்போது இரண்டாவது தடவையாகவும் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.
அதையடுத்து அவர் இரணவில கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.
இரண்டாவது தடவை அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய பின்னர் அவரது வீட்டைப் பாதுகாப்பாக மாற்றுவதற்கும், அவர் சுய தனிமைப்படுத்தலில் இருப்பதற்கும் ஏதுவான சூழலை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் மேற்கொண்டனர்.
சுய தனிமைப்படுத்தலில் இருந்தவேளை காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குறித்த இளைஞர் இம்மாதம் 2ஆம் திகதி சிலாபத்திலுள்ள கொரோனா பரிசோதனை நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.
“இதன்போது அவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது” – என்றார் உபுல் ரோஹன.
இதேவேளை, நாட்டில் மூன்று தடவைகள் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒரேயொரு நபர் இவர் என பொதுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது