
இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் கம்பஹா மாவட்ட மாணவர்கள் 16 பேர் இன்று சுய-தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ஏ. லதாகரன் தெரிவித்தார்.
மருத்துவ பீடத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் 16 மாணவர்கள் நீண்ட விடுமுறைக்குப் பின்னர் தற்போது பல்கலைக்கழகத்திற்கு திரும்பியுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர்களை அவர்களின் விடுதியிலேயே தங்க வைத்து அதிகாரிகள் சுய-தனிமைக்கு உட்படுத்தியுள்ளனர்.
அவர்களிடம் பிசிஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்தார்.
அத்தோடு நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்ச சூழ்நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.