May 13, 2025 17:45:13

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19: பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பிசிஆர் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி செயலகத்தில் கொவிட் – 19 தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கலந்துரையாடினார்.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதை மக்கள் காலப்போக்கில் மறந்துள்ளதாகவும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு அதுவே காரணம் என்றும் மருத்துவர்கள் கருதுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எல்லா மாவட்டங்களிலும் சீரான பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் குறிப்பாக, அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் சோதனைகளை நடத்துமாறு பணித்துள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“எனினும், பெரிய தொழிற்சாலைகள் இந்தப் பொறுப்பை புறக்கணித்துள்ளதாக தெரிகிறது. தற்போதைய நிலைமை பற்றிய தெளிவான புரிதலுடன் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு உதவ பொது மக்களும் ஊடகங்களும் கடமைப்பட்டுள்ளன” என்றார் ஜனாதிபதி.

நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேறுவதை தடுக்க ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷ கூறினார்.