November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரத்தை மீறி செயற்படுகின்றது’

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவானது அதிகாரத்தை மீறி தேவையற்ற விடயங்களை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”1978 ஆம் ஆண்டு முதலாது ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டிருந்தது. முதலாவது ஆணைக்குழுவிலேயே சிறிமாவின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டதற்கு எதிராக  நாம் குரல் கொடுத்தோம்.

சிறிமா மீண்டும் சபையில் இருந்த போது அவரின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டமைக்காக முழு தேசத்திடம் ரணில் விக்கிரமசிங்க பகிரங்க மன்னிப்பை கோரியிருந்தார்.

மேலும், விஜேகுமாரதுங்க கொலை தொடர்பில் சந்திரிகாவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக குற்றச்சாட்டுகளை ஐ.தே.க பக்கம் திருப்ப முற்பட்டதாகக் கூறிய அவர், வரலாறு முழுவதும் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள்  மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியுள்ளன.

அத்துடன் அரச சேவையில் உள்ள அதிகாரிகளின் வழக்குகள் குறித்து விசாரணைக்கு உட்படுத்த இந்த ஆணைக்குழுவுக்கு எவ்வித அதிகாரமும் இல்லையென சட்ட மா அதிபரும் கூறியுள்ள அதேநேரம், நான்கு பேர் கொல்லப்பட்ட வழக்கொன்று தொடர்பில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆனால்  மீண்டும் இந்த வழக்கை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டுமென சிபாரிசு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1978, 1984ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களையும் விட இது மோசமானதொரு ஆணைக்குழுவாகும். ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவரும் ஊழல்களுடன் தொடர்புடையவராவார்.

2015 ஆம் ஆண்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின் பிரகாரமே இந்த படுகொலைகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டன.

இந்த ஆணைக்குழுவானது அதற்கு வழங்கியுள்ள அதிகாரத்தை மீறி தமக்கு தேவையானவர்களின் வழக்குகள் குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.