அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்னர் 4 பில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேசக் கடன் தொகையை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் இலங்கை உள்ளது.
இந்த நெருக்கடியை சமாளிக்க இந்திய மத்திய வங்கியிடம் கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசு முன்னெடுத்து வருகின்றது.
இந்தியாவிடம் பெற்றுள்ள கடன்களை திருப்பிச் செலுத்தும் கால எல்லையை நீட்டிக்கவும் இப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி கூறுகின்றது.
நாட்டின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்து கொண்டு செல்வதையும், நாடு பொருளாதார நெருக்கடி ஒன்றினை விரைவில் சந்திக்கவுள்ளதையும் மூடிஸ் நிறுவனத்தின் இலங்கை தொடர்பான புதிய மதிப்பீடு காண்பிக்கின்றது.
நாடுகளின் நிதி நிலைமைகளை ஆய்வுசெய்யும் மூடிஸின் புதிய தரப்படுத்தலின் படி, இலங்கையின் நிதி நிலைமை B2 இலிருந்து Caa1 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இது இலங்கைக்கு கடன்களை பெற்றுக்கொடுப்பதில் சிக்கலை ஏற்படுத்தும்.
ஆனால் இந்த மதிப்பீடு சரியானது அல்ல என இலங்கை அரசு நிராகரித்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலைமையில் இலங்கை மேலும் கடன்களை பெற்றுக்கொள்வது குறித்து இந்தியா- சீனா- ஜப்பான் ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது.
ஆனால் இலங்கை கடன் நெருக்கடியில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஸ்மன் கூறினார்.
மேலும் அவர் “இந்த விமர்சனங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது, நாம் சர்வதேச கடன்களில் நெருக்கப்படவில்லை, இலங்கை வாங்கியுள்ள சர்வதேச கடன்களில் இம்முறைக்கான கடன் தொகையாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.
“ஆனால் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்னர் மேலும் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியாக வேண்டும். அதற்கான மாற்று வேலைத்திட்டம் என்ன என்பதை ஆராய்ந்து வருகின்றோம்” என்றும், “இந்தியாவிடம் இருந்து கடன்களை பெறுவது குறித்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது” என்றும் கூறினார்.
அவ்வாறே, இந்தியாவிற்கு வழங்க வேண்டிய கடன்களை திருப்பிச் செலுத்த சற்று காலம் தாழ்த்தவும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாவும் மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஸ்மன் குறிப்பிட்டார்.