
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின்றி மக்கள் ஒன்று கூடுகின்ற எந்தவொரு வைபவத்தையும் ஏற்பாடு செய்ய முடியாது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாளை (சனிக்கிழமை) முதல் திங்கட்கிழமை வரை தொடர்ச்சியான விடுமுறை காணப்படுவதால், இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வவுனியாவிற்கு விஜயம் செய்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிற்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயற்படுவதை உறுதி செய்வதற்காக வார இறுதி நாட்களில் கொவிட்-19 வைரஸ் பரவல் அதிகமாக காணப்படுகின்ற பகுதிகளில் மேலதிக பொலிஸ் அதிகாரிகளை கடமைகளில் அமர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை, கொவிட்-19 வைரஸ் பரவல் தொடர்பான நெருக்கடி நிலைமை இன்னமும் குறைவடையவில்லை. வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஒருசில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. அதனால் வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை பின்பற்றுமாறும் அவர் கூறினார்.
இதில் முகக்கவசம் அணியும் சட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்த அவர், பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணுதல் மற்றும் கைகளை சுத்தம் செய்து கொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் அவதானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.