November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா: தீர்மானங்களை எடுக்க கூடுகிறது ஜனாதிபதி செயலணி

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அது தொடர்பாக முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று கூடவுள்ளது.

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் இரண்டு மாதங்களாக நாட்டில் 300 ற்கும் குறைவான கொரோனா தொற்றாளர்களே நாளாந்தம் அடையாளம் காணப்பட்டனர்.

ஆனால் கடந்த திங்கட்கிழமை முதல் நாளாந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து, கடந்த மூன்று நாட்களாக 500 ற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டில் மீண்டும் சுகாதார கட்டுப்பாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று சுகாதார தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அத்துடன் தொற்றாளர்கள் அதிகமாக பதிவாகும் பிரதேசங்களை முடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று முதல் குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய உள்ளிட்ட சில பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலைமையில் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுப்பதற்காக இன்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் கொவிட் செயலணி கூடவுள்ளது.