
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹரானுடன் தொடர்புகளை பேணியதாகவும் அடிப்படைவாத போதனைகளுடன் தொடர்புபட்டிருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு, மேலும் மூன்று பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குளியாப்பிட்டிய- கெகுனகொல்ல பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
‘சஹரானின் மனைவியின் தந்தை உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக’ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தடுப்புக் காவலில் வைத்து, விசாரணைக்கு உட்படுத்தவுள்ளனர்.
இதேவேளை, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உயிரிழந்த உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்தி, மோசடிகளில் ஈடுபட்டதாக கூறப்படும் 42 வயதுடைய நபரொருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் உயிரிழந்த சிலரின் பெயரில் அடையாள அட்டை மற்றும் போலியான கடவுச் சீட்டுக்களை தயாரித்து, நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.