January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மினுவாங்கொட தொழிற்சாலையில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கையில் உயர்வு

கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட ‘பிரன்டெக்ஸ்’ ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் மேலும் 466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று வரையில் அங்கு 101 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் அந்த எண்ணிக்கை இன்று காலையில் 321 ஆக உயர்வடைந்திருந்தது.

இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் அந்த எண்ணிக்கை 569 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்ணொருவர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

தொழிற்சாலையில் பணியாற்றுவோரில் பலர் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களாகும். இவர்கள் விடுமுறையில் வீடுகளுக்கு சென்றிருந்த போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய யாழ்ப்பாணத்திலும் பெண்ணொருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலைமையில் நாட்டில் எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் தீர்மானம் மிக்கதாக இருக்கும் என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இன்னும் பல பரிசோதனை முடிவுகள் வெளிவர உள்ளதால் அந்த முடிவுகளின் அடிப்படையில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.