July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் நாட்டுக்கு ஆபத்தானது’: ரணில் விக்கிரமசிங்க

கொழும்பு துறைமுக பொருளாதார நகரம் தொடர்பில், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் நாட்டுக்கு  அபாயமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலம் பாராளுமன்ற அதிகாரத்தை பகிரும் வகையில் உள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆணைக்குழு சட்டமூலத்தின் ஊடாக, சட்டவாக்கத்துறை, நீதித்துறை மற்றும் அமைச்சரவை என்பனவற்றின் அதிகாரம் நீக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற சட்டமூலம் உருவாக்கப்படவில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் குறிப்பிட்டார்.

இவ்வாறானதொரு சட்டமூலம் முன்வைக்கப்பட்டது ஏன் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு, கொழும்பு நிதி மையத்தை உருவாக்குவது தொடர்பில், தாம் அமைச்சரவையில் யோசனை ஒன்றை முன்வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு தரப்புகளுடன் கலந்துரையாட வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.