July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வடக்கில் தமிழ் இளைஞர்,யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை’

வட மாகாணத்தின் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் மொழி தெரிந்த இளைஞர், யுவதிகளை, இணைத்துக்கொள்வதற்கு பொலிஸ் தலைமையகம் முழுமையான  சேவையினை வழங்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இலங்கை பொலிஸ் திணைக்களம், மற்றும் வடமாகாண பொலிஸ் நிலையத்தின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் தொழில் வாய்ப்பற்ற தமிழ் இளைஞர்,யுவதிகளை பொலிஸ் சேவைக்கான ஆளணியினை ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்ற செயலமர்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் 10 ஆயிரம் இளைஞர்,யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் 24 ஆயிரம் பேரை சேவையில் இணைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாணத்தில் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொதுமக்கள் முறைப்பாடுகள் எழுத்து மூலமாகவோ, வாய்மொழி மூலமாகவோ வருகின்றபோது மொழிப் பிரயோகங்களை தவற விடுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனவே இவ்வாறான பிரச்சனைகள் தமிழ் இளைஞர், யுவதிகளை இணைக்கும் போது இந்த நிலைமையை மாற்ற முடியும் என்பதுடன், இதற்கான ஒத்துழைப்பினை வழங்க வடமாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அதிகாரிகளும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண இதன்போது கேட்டுக்கொண்டார்.