November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் பரவிவரும் கொரோனா வைரஸை இனங்காண சிறப்பு பி.சி.ஆர் சோதனைகள் தேவை’

இலங்கையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் மாதிரிகளை பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தும் போது வைரஸ் தொற்றுநோய்களை அடையாளம் காண உதவும் எஸ்-புரதங்களை அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவசுந்தர தெரிவித்தார்.

அரச வங்கி ஒன்றில் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் இவ்வாறு எஸ்-புரதங்களை அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரிட்டன் போன்ற நாடுகளில் தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ்கள் பி.சி.ஆர் சோதனைகளின் போது இதனை ஒத்த தன்மையைக் காட்டியுள்ளன என்று பேராசிரியர் சந்திம ஜீவசுந்தர கூறினார்.

இதையடுத்து, எஸ்-புரதங்களை பரிசோதிக்கக் கூடிய சிறப்பு பி.சி.ஆர் சோதனை உபகரணங்களை இலங்கைக்கு வரவழைக்க கோரப்பட்டுள்ளதாகவும், அவை வந்ததும் அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் எஸ்-புரதங்கள் தொடர்பில் சோதனைகள் ஆரம்பிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த பரிசோதனை உபகரணங்கள் 1 மணி நேரம் 40 நிமிடங்களுக்குள் முடிவுகளைக் காட்டக்கூடும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதன் ஊடாக நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் ஏற்கனவே இருந்த வைரஸின் ஒரு பிறழ்வா அல்லது வேறொரு நாட்டில் பரவி வரும் கோவிட் வைரஸ் இலங்கையிலும் பரவுகிறதா என்பதை இந்த சோதனை வெளிப்படுத்தும் என்று பேராசிரியர் சந்திம ஜீவசுந்தர தெரிவித்தார்.

கடந்த இரண்டு வாரங்களில் நாட்டில் இளம் வயதினரிடையே கோவிட் தொற்று விரைவாக அதிகரித்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து முறையான பரசோனைகளின் பின்னரே உறுதியான தகவல்களை வழங்க முடியும் என்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவசுந்தர தெரிவித்தார்.