July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“மிருசுவில், 11 மாணவர்கள் கொலைக் குற்றவாளிகளை இராணுவத்தினர் என்பதற்காக விடுதலை செய்ய முடியாது”: சரத் பொன்சேகா

மிருசுவில் படுகொலை மற்றும் 11 மாணவர்களை கொலை செய்தவர்கள் போர் வீரர்கள் என்பதற்காக அவர்களை தண்டனையில் இருந்து விடுவிக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு மூலம் அரசாங்கம் குற்றவாளிகளை விடுவிக்கவும் எதிர்க்கட்சியின் பிரஜாவுரிமையை பறிக்கவும் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறித்து அரசாங்கத்திற்கு எதிரான அழுத்தங்களில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

11 மாணவர்களை படுகொலை செய்தவர்கள், மிருசுவில் கொலையாளிகள், அவன்கார்ட் ஊழலில் ஈடுபட்டவர்கள் என முக்கியமான குற்றவாளிகளை விடுதலை செய்யும் நோக்கமும் அரசாங்கத்திற்கு உள்ளதென சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்றத்தை பலவீனப்படுத்தி, சட்டத்தை கையில் எடுக்கும் விதமாகவே அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி உறுபினர்களின் பிரஜாவுரிமையை பறிப்பது ஜனநாயக ரீதியான செயற்பாடல்ல என்றும் அதனை தாம் பயந்த, பலவீனமான அரசியல் நகர்வாகக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த ஆணைக்குழுவின் நோக்கம் என்னவெனில், முன்னைய ஆட்சிக்காலத்தில் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டு, தற்போது சிறையில் உள்ளவர்கள் மற்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதாகவும்.

முக்கியமாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் அவருடன் நெருக்கமாக செயற்பட்ட தசநாயக, சுமித் ரணசிங்க ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு ஒன்று உள்ளது.

பாடசாலை மாணவர்கள் 11 பேரை கடத்தி அவர்களின் பெற்றோரிடம் கப்பம் கேட்ட குற்றச்சாட்டு. இதில் தமிழ் சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் இருந்தனர். இந்த உண்மைகள் வெளிவந்த நேரத்தில் அவர்களை கொலைசெய்து கடலில் போட்டனர்.

இவ்வாறான சம்பவம் இன்று ஆட்சியில் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு நடந்தால் எவ்வாறு இருக்கும்.

இவ்வாறான நபர்களை விடுதலை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைப்பது ஏற்றுக்கொள்ளகூடிய விடயமல்ல”

என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சுனில் ரத்நாயக உள்ளிட்டவர்கள் இராணுவ சிப்பாயாக இருந்தாலும், அனாவசியமான கொலைகளை செய்தவர்களை விடுதலை செய்ய முடியாது என்றும் அவர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.