January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“ஹரின் பெர்னாண்டோவை கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது”; சம்பிக்க ரணவக்க

எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை கைது செய்யவும் அவரது செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் தற்போது இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ராஜபக்‌ஷ குடும்பத்தினருக்கு சவாலான அரசியல்வாதிகளை இலக்குவைத்து அவர்களை சிறைப்படுத்தி முடக்குவதும், தமக்கு தேவையான நபர்களை குற்றச்சாட்டுகளில் இருந்து காப்பாற்றவுமே அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இப்போது உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு அரச அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக இடம்பெற்றதாக கூறப்படும் பழிவாங்கல்களை விசாரிக்க உருவாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த ஆணைக்குழுவில் குற்றவாளிகளை நிரபராதிகளாக்குதல் மற்றும் அரசாங்கத்திற்கு சவாலான நபர்களை இலக்கு வைத்து அவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார வெளியிட்ட கருத்துக்களை ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி.க்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ள நிலையிலேயே சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி சார்பில் துடிப்பாக செயற்படும் உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ.சபையில் ஒரு சம்பவம் நேற்று(புதன்கிழமை)இடம்பெற்றது, அதற்காக இன்றைய தினம் அவரை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்துள்ளனர். அவரை கைது செய்யவும், அவரது செயற்பாடுகளை தடுக்கவுமே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. இதில் வேறு காரணிகள் இருக்க முடியாது.

இந்த ஆண்டில் இல்லாவிட்டால் அடுத்த ஆண்டில் நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சி காணும்.சில நேரங்களில் ஆட்சி கவிழ்க்கப்படும். அவ்வாறான நிலையில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் இதேபோன்று ஆணைக்குழு அமைத்து இன்றைய அரசாங்கத்தை பழிவாங்க முடியும்.

எனவே அவ்வாறான தவறான முன்னுதாரணங்கள் இருக்கக்கூடாது. நாட்டின் நீதி கட்டமைப்புக்கு எதிராக செயற்படக்கூடாது. அது எமது எதிர்கால பிள்ளைகள் வெறுப்பையும் அதிருப்தியையும் கொண்டு ஆயுதம் ஏந்தும் நிலையொன்றை உருவாக்கிவிடக்கூடாது. ஆனால் தவறான ஆட்சியை ராஜபக்‌ஷ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது எனவும் அவர் மேலும் கூறினார்.