அடிப்படைவாத போதனைகள் உள்ளடங்கிய பாடப் புத்தகங்கள் இல்லாமல் செய்யப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
புலனாய்வுப் பிரிவினரும் நாட்டின் ஏனைய பாதுகாப்பு தரப்பினரும் மிகவும் அவதானத்துடன் இருக்கின்றனர். எனவே அடிப்படைவாதிகள் தலைதூக்குவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்படாது.
அதேபோல, அடிப்படைவாதத்தை போதிக்கும் புத்தகங்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவை அடையாளம் காணப்பட்டு சுங்கத் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக, பாடசாலை புத்தகங்களிலும் பிழையான விடயங்கள் சில கற்பிக்கப்படுகின்றன. அவையும் அடையாளம் காணப்பட்டுள்ளன. சிலை வழிபாடுகளில் ஈடுபடுவோரை கொலை செய்தல், வேற்று மதங்களை வழிபாடு செய்வோரை துன்புறுத்தல் போன்ற விடயங்கள் பாடசாலை புத்தகங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடந்த வாரம் கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட குழுவினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளோம்.
எனவே, அடிப்படைவாத போதனைகள் உள்ளடங்கிய பாடப் புத்தகங்கள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான புத்தகங்களை மாணவர்களுக்கும் மக்களுக்கும் வழங்குவதை தடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.