November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்று; விழிப்புடன் செயற்படுமாறு யாழ்.அரச அதிபர் வேண்டுகோள்

FilePhoto

கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக செயற்படுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ். மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் கொரோனா நிலைமை கடந்த வாரம் சற்று அதிகரித்துள்ளதுடன் நேற்றையதினம் (புதன்கிழமை) கிடைத்த பி.சி.ஆர் பரிசோதனை அடிப்படையில் 14 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய யாழ் மாவட்டத்தில் 1,155 பேருக்கு கடந்த ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 639 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 17 இறப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரச அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், யாழில் 1547 குடும்பங்களைச் சேர்ந்த 4,417 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். தொடர்ச்சியாக பி.சி.ஆர் பரிசோதனைகள் மக்கள் கூடும் இடங்கள், வர்த்தக நிலையங்களை அண்டிய பகுதிகளிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், பாரதிபுரம் என்னும் கிராமம் நாளை (வெள்ளிக்கிழமை) காலையில் இருந்து விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு 97 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி. சி.ஆர் பரிசோதனைகளில் மூன்று நபர்களுக்கு மாத்திரமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொற்று நிலைமை சற்று தீவிரம் அடையலாம் என எதிர்பார்க்கப்படுவதன் காரணமாக பொதுமக்கள் சற்று விழிப்பாக செயற்பட வேண்டும் எனவும்  நகரப்பகுதி மற்றும் மக்கள் ஒன்று கூடும் இடங்களில் பொது மக்கள் அவதானமாக தங்களுடைய செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் யாழ். அரச அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.