திருகோணமலை சீனக்குடாவில் இந்தியா பயன்படுத்தாத எண்ணெய்க் குதங்களை மீளப்பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாக இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில் தெரிவித்தார்.
குறித்த எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிடம் இருந்து மீண்டும் பெற்றுக்கொள்வது குறித்த நகர்வுகள் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பில, “இந்தியா பயன்படுத்தும் எண்ணெய்த் தாங்கிகளை தவிர்த்து ஏனைய எண்ணெய்த் தாங்கிகளை எமக்கு பெற்றுக்கொள்ள இந்திய அரசுடனும், இந்திய எண்ணெய் நிறுவனத்துடனும் (ஐஓசி) அரசு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகக் கூறினார்.
குறித்த எண்ணெய்க் குதங்களை தமது அரசாங்கம் இந்தியாவிற்கு வழங்கவில்லை என்றும், 2003 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் காலத்தில் 35 ஆண்டுகால குத்தகைக்கு அவை வழங்கப்பட்டதாகவும் உதய கம்மன்பில தெரிவித்தார்.
சகல எண்ணெய்த் தாங்கிகளிலும் 75 வீத பங்கு இந்தியாவிற்கும், 25 வீத பங்கு இலங்கைக்கும் இருக்கும் விதத்தில் இலங்கை-இந்திய கூட்டு நிறுவனத்திற்கு (லங்காஐஓசி) குத்தகைக்கு கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மொத்தமாகவுள்ள 104 எண்ணெய்த் தாங்கிகளில் 99 தாங்கிகளே இன்று பாவனைக்குரியதாக உள்ளதாகக் கூறிய அமைச்சர், அவற்றிலும் 15 தாங்கிகளை மட்டுமே இந்தியா பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்தியா பயன்படுத்தாத தாங்கிகளை மீண்டும் இலங்கையின் கட்டுபாட்டின் கீழ் கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
இரு தரப்பு உடன்படிக்கையை ஒரு தரப்பினருக்கு சாதகமாக மாற்றியமைக்க முடியாது என்று கூறிய அமைச்சர், மீளப் பெறப்படும் எண்ணெய்த் தாங்கிகளை வேறு யாருக்கும் வழங்கும் நோக்கம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.